குற்றாலத்தில் தீ விபத்தில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள்: 20 கடைகள் சாம்பல்
1 min read
Cylinders burst in fire at Courtalam: 20 stores ash
25.8.2023
குற்றாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் சாம்பலானது. 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமானது.
குற்றாலம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த சீசன் காலங்களில் குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்தவர்கள் குற்றாலநாதர் தெற்கு பிரகாரம், வடக்கு மற்றும் கீழ்பிரகாரம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சீசன் ஜூலை மாதம் தான் துவங்கியது. ஆனால் இம்மாதம் முதல் வாரத்திலேயே சீசன் நிறைவு பெற்றுவிட்டது.
தற்போது குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிக மிக குறைவாக தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து விட்டது.
தீவிபத்து
குற்றாலநாதர் கோவில் தெற்கு பிரகாரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பிற்பகல் 2.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று வேகமாக வீசியதாலும் தொடர்ந்து இடைவெளி இன்றி கடைகள் இருந்ததாலும் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. இதனால் கடை வியாபாரிகள் பொருட்களை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடினர்.
கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சில கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் மேலும் பல கடைகளுக்கும் அருகில் சிற்றாற்றின் கரை பகுதியில் உள்ள மரங்களிலும் தீ பரவியது. பச்சை மரங்கள் தீக்கு இரையாகின. சிலிண்டர்கள் வெடித்தது பெரிய அளவிலான வெடிகுண்டு வெடித்ததை போன்ற சத்தத்தை எழுப்பியதால் வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.
தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் சுரண்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் 20 க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமானது.
மேலும் குற்றாலநாதர் கோவில் புகை மண்டலத்தால் சூழப்பட்டது. தீ விபத்தில் சேதமான மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
கடைகள் தீப்பிடித்து எரிந்ததும், சிலிண்டர்கள் வெடித்ததும் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் கடைகள் போதுமான இடைவெளி விட்டு அமைக்கவும், விதிமுறைகளை மீறாமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முத்துசாமி, நிருபர்,