எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்- ஐகோர்ட்டு தீர்ப்பு
1 min read
Edappadi Palaniswami-led AIADMK general committee resolution will go – High Court verdict
25.8.2023
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்தது. இது ஓ. பன்னீர் செல்வத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச். மனோஜ் பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு
வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு அளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது. அதன்படி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை கோர்ட்டு ஏற்றுக் கொள்கிறது. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்பதாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது. இப்போது தடைவிதித்தால் கட்சி செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக எந்த தடையும் விதிக்க முடியாது. ஆகையால் ஓ.பன்னீர் செல்வமும், மற்றவர்களும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
இந்த தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.