July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

“கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் வழக்கு தொடருவோம்” – எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

1 min read

“If Kanagaraj is called Jayalalithaa’s driver, we will file a case” – EPS warning

25.8.2023
“கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் என இனி யாரும் சொல்லக் கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம். ஜெயலலிதாவுக்கு கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுநராக இல்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இனிப்பு

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கோடநாடு வழக்கு

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த வெற்றி. அதிமுக பலமாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அதிமுக பெறும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும். இந்தக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.
கோடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவது தவறான விஷயம். ஓர் ஆட்சி இருக்கும்போது பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்தச் சம்பவத்தை சட்டரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்றைய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்கின்றனர், அது ஒருபோதும் நடக்காது. கனகராஜின் சகோதரர் தனபால் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இன்றைய ஆட்சியாளர்களே விசாரணைக்கு அழைத்துச் சென்று 3 மாதங்கள் சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தவர்.
கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் என இனி யாரும் சொல்லக் கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம். ஜெயலலிதாவுக்கு கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுநராக இல்லை. ஒரு குற்றவாளியை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தவர் எனக் கூறுவது தவறு. கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதைப் பற்றி பேசுவதே தவறு.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவே மதுரையை நோக்கி திரும்பிப் பார்க்கும் எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. தென்மாவட்டத்தில் நடத்த முடியாது என்று கூறிய, நிலையில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டது இல்லை. அதிமுக ஒன்றாக இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்துள்ளோம். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மூலமாக தீர்ப்பு பெற்றுள்ளோம்.

சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கியது நாட்டுக்கு கிடைத்த வெற்றி. தமிழக விஞ்ஞானிகள் மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு சலித்தவர்கள் அல்ல என நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முன்னே நின்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.

வரவேற்பு

ஒரு சிலரை தவிர்த்து அதிமுகவுக்கு உழைத்தவர்கள் பிரிந்து சென்றிருந்தால் கட்சிக்குக்குள் வர நினைத்தால் இணைத்துக் கொள்வோம். சிலர் கட்சி ரீதியாக வளர்ந்து அதிகாரத்துக்கு வந்து எப்படி இருக்கின்றனர் என தெரியும். கட்சி மூலமாக வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர். இன்றைய ஆளுங்கட்சியுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள், எட்டப்பராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார். மேலும், “அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கோடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக எனது தம்பி ஏற்கெனவே என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை போலீஸார் அது சம்பந்தமாக என்னை அழைத்து விசாரிக்கவில்லை. என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சிபிசிஐடி போலீஸிடம் அளிப்பேன். முதல்வரை சந்திக்கவும் தயாராக உள்ளேன்” என்று அவர் கூறியிருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.