குற்றாலம் தீ விபத்து பற்றி இந்து முன்னணி பரபரப்பு புகார்
1 min read
Hindu front stirs complaint about Kurdalam fire accident
27.8.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது இது பற்றி தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் எம் இசக்கிமுத்து கோவில் நிர்வாகம் மீது பரபரப்பு புகார்களை தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-
நான் இந்து முன்னணியில் மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறேன். ஏழைகளின் இன்ப சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மற்றும் கார்த்திகை மார்கழி தை போன்ற மாதங்களில் லட்சக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் உலகெங்கிலும் இருந்தும் வருவது வழக்கம். சிவதலங்களில் மிகவும் பழமையான சிவதலம் திருக்குற்றாலநாதர் திருக்கோவில் ஆகும். சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளில் இது ஒன்றாக கருதப்படுகிறது. ஆதி காலத்தில் வைணவ திருக்கோவிலாக இருந்துள்ளதாகவும் வரலாற்று சான்றுகள் தெரிவிக்கிறது.
குற்றாலம் திருக்கோவில் சங்கு வடிவத்தில் உள்ளது. அகத்தியர் பெருமான் திருக்கோவிலுக்கு வந்து பெருமாளை சிவனாக மாற்றியதாக திருக்கோவில் வரலாறு சொல்கிறது.
இப்படி பல்வேறு புகழுக்கு சொந்தமான திருக்கோவிலில் கடந்த 25 ம் தேதி அசம்பாவித சம்பவமாக பெருந்தீ விபத்து ஏற்பட்டு மிகுந்த பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு முதல் காரணம் திருக்கோவில் நிர்வாக அதிகாரி செயல் அலுவலர் கண்ணதாசன் தான். ஏலம் விடும் பொழுது முறையாக அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிசையாக நடந்தது தான் இதற்கு முழு காரணம்.
எளிதில் தீப்பற்ற கூடிய கடைகளை கோவில் மதில் சுவர் வரை அமைக்க கூடாது என்பது கோவில் சட்டத்திட்ட விதிமுறையில் உள்ளது அதை பின்பற்றாமல் ஒவ்வொரு கடைகளுக்கும் 10 மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்ற விதிமுறையையும் பின்பற்றாமல் தொடர்ச்சியாக கடைகளை வியாபார நோக்கில் ஏலம் விடப்பட்டுள்ளதால், இது போன்ற தீ விபத்து நடைபெற காரணமாக இருக்கிறது.
உணவகங்களும், சிப்ஸ் கடைகளும், டீ கடைகள், ஜவுளி கடைகளை அருகே அருகே அமைக்க அனுமதி கொடுத்ததால் தான் இது போன்ற பெருந்தீ விபத்து நடைபெற்றுள்ளது. ஆகவே சட்ட விதிமுறைகளை பின்பற்ற தவறிய கண்ணதாசன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், இவரது செயலை உரிய முறையில் கண்காணிக்காத தணிக்கையாளர்கள் இணை ஆணையர் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
திருக்குற்றாலத்தை நம்பி பல்வேறு கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் உள்ளுரைச் சார்ந்த பணம் படைத்த நபர்கள் 5க்கும் மேற்பட்ட கடைகளை ஒரே நபரின் பெயரில் எடுத்து, மாற்று மதத்தை சார்ந்தவர்களுக்கு அதிக இலாப நோக்கத்தோடு உள் வாடகைக்கு விட்டுள்ளனர். இக்கோயிலின் பழமையும். பெருமையும் தெரியாத மாற்று மத சிந்தனையாளர்கள், இக்கோயிலின் தெற்கு வாசல் பகுதியில், விபத்து நடந்த இடத்தில் மாமிச இறைச்சியை சமைக்கும் போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் தகவல்கள் உறுதியாகிறது.
இதற்கு முதல் காரணம் என்னவென்றால் உள்ளுரைச் சேர்ந்த பணம் படைத்த நபர்கள் தான். இதை முறையாக கண்காணிக்காத திருக்கோவில் செயல் அலுவலர் கண்ணதாசன் இணை ஆணையர் அன்புமணி அவர்களும் இந்த விபத்திற்கு முதல் குற்றவாளியாக கருதி அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்
மற்றும் கடைகளை உள் வாடகைக்கு விட்ட நபர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் கோவில் சுற்றுச் சுவர்களுக்கு அருகில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற விபத்து நடைபெறாமல் இருக்க, திருக்கோவிலை சுற்றி சுமார் 200 மீட்டர் தொலைவில் தான் கடைகளை அமைத்துக் கொள்ள தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் அனுமதி வழங்க வேண்டும்.
இது போன்ற பெருந்தீ விபத்து நடைபெற காரணமான பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் தக்க விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன் வாயிலாக விரும்புகிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனுவை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் துரை. இரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் ஆகியோருக்கும் கொடுத்துள்ளார்.
-முத்துசாமி, நிருபர்