அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு
1 min read
Bail petition of Minister Senthil Balaji in Madras Principal Sessions Court
29.8.2023
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.
இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது காவலை ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினமே, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றுடன் (ஆக.28) செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் கோர முடியாது என்றும், ஜாமீன் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டிருந்தது.
ஜாமீன் கோரி மனு
இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.
இந்த முறையீட்டைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, அதனை கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார். இந்த மனுவுக்கு முறையாக எண்ணிடப்படும் பட்சத்தில், நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.