சமையல் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கும் வாக்குறுதி என்னவானது? – திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி
1 min read
Cooking cylinder Rs. What is the promise of 100 grant? – Annamalai question for DMK
29.8.2023
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சமையல் எரிவாயு
நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.
இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503- ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.