உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்
1 min read
Congress leader strongly condemned Udhayanidhi Stalin
5.9.2023
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு நாடு முழுக்க கண்டனங்களும், எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் டாக்டர் கரண் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவற்றை துளியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த சனாதன தர்ம கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது. தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சிதம்பரம், சுசீந்திரம், ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைசதிறந்த கோவில்கள் உள்ளன.” “பொறுப்புள்ள அரசியல்வாதியாக, இதுபோன்று துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாசாரம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, ஆனால் திரு உதயநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு நான் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்து இருக்கிறார்.