July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

“ஆ.ராசாவால் திமுகவின் தலைவராக முடியுமா?”- தமிழிசை கேள்வி

1 min read

“Can A. Raza become the leader of DMK?”- Tamilisai question

“சனாதனத்தை ஒழிப்பதன் மூலம் திமுக எம்.பி ஆ.ராசாவால் அக்கட்சியின் தலைவராகவோ, தமிழக முதல்வராகவோ ஆகிவிட முடியுமா?” என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில், அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சனாதன ஒழிப்பால்தான் ஆளுநர் பதவியில் தமிழிசையும், பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலையும், அமைச்சர் பதவியில் அமித் ஷாவும் இருப்பதற்கு காரணம் என்று திமுக எம்.பி.ராசா கூறியிருந்தது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆ.ராசா சனாதனத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளார். சனாதன ஒழிப்பு மூலம் சாதியை ஒழிப்பதாக கூறும் சூழலில், ராசாவால் ஏன் அவரது கட்சியில் தலைவராக முடியவில்லை?. முதல்வராகி விடுவாரா? உதயநிதிக்கு தரும் அங்கீகாரம் அனைவருக்கும் தந்து விடுவார்களா?

நான் கருவறைக்குள் செல்ல முடியுமா என்று எக்ஸ் பக்கத்தில் கேட்கிறார்கள். சில பழக்க வழக்கங்கள் மதங்களில் நடைமுறையில் உள்ளன. மற்ற மதங்களில் மதம் சார்ந்த கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை பின்பற்றும்போது விமர்சிக்காதவர்கள், இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறார்கள். சாதிப் பாகுபாடு இங்கு இல்லை. சமதர்ம சமுதாயம்தான் சனாதனம். சனாதனம் என்பதற்கு தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம்.

சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் எனச் சொல்கின்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதி ரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், தொகுதி தராதீர்கள். ஏன் திமுகவில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதல்வர் பதவி தர மறுக்கிறீர்கள்? திமுகவில் ஒரு குடும்பத்தைத் தாண்டி வேறு யாரும் முக்கியத்துவம் பெற முடியாது. ஆ.ராசா பதற்றத்தில் பேசுகிறார். நான், அண்ணாமலை என பலரும் பொதுவெளியில் இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளோம். எனவே, அதற்கும், ராசா கூறும் விஷயத்துக்கும் சம்பந்தமில்லை. சனாதனத்தை எதிர்த்து பேசுவதால், அவரால் திமுகவில் உயர் பதவிக்கு வந்து விட முடியுமா? ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே உயர் பதவிகளுக்கு வர முடிகிறது.

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் முதலில் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவியுங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுகவில் இல்லையா? ஆனால், அவர்களால் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. நாங்கள் இருந்த இயக்கத்தில் பரந்துபட்ட வாய்ப்பு கிடைக்கிறது. ஆ.ராசா திமுகவின் தலைவராகிவிட முடியுமா?

உதயநிதியும், அவர் தந்தையும் உண்மையாக சாதியினால்தான் சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று கூறுகின்றனர். அனைவருக்கும் வாய்ப்பு தருகிறோம் என்று கூறுகின்றனர். திமுகவில் மிகவும் அடி மட்டத்தில் உள்ளவர்களை அக்கட்சியின் தலைவராகவோ? முதல்வராகவோ? ஆக்கிவிட முடியுமா? திமுக எதையும் செய்யாமல், உலகுக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு என்ன அர்த்தம்?

பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதைதான், தமிழகத்தை கல்வியில் உயர்த்தியது. எனவே, திமுகவே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா முதலில் அவரது கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா என முதலில் கூறுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள். திமுக தலைவராக, முதல்வராக ஆ.ராசா வந்தால் அவர் கூறுவதை ஒத்துக்கொள்கிறேன். தற்போது அவர் விளம்பரத்துக்காக பேசுகிறார்” என்று அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.