சனாதனம் குறித்த திமுக கருத்துகளை காங். ஏற்க மறுப்பு
1 min read
DMK comments on Sanathanam, Congress. Refusal to accept
7/9/2023
சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்துகளை தாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா, “அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மதத்தையும், அனைவரின் நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம். எவர் ஒருவரும் வேறொருவரின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட முடியாது. இதுபோன்ற கருத்துகளை அரசியல் சாசனமும் ஏற்கவில்லை; காங்கிரஸ் கட்சிக்கும் இதில் நம்பிக்கை இல்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றைப் பார்த்தால், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கொள்கையை நாங்கள் எப்போதும் கொண்டிருந்தது தெரியும். அரசியல் சாசன விவாதங்களின்போதும் நாங்கள் இதை வெளிப்படுத்தி இருக்கிறோம். அரசியல் சாசனமும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் இதில் மாறுபட வாய்ப்பே இல்லை.
திமுகவின் கருத்தை ஏன் கண்டிக்கவில்லை எனக் கேட்கிறீர்கள். அவர்களின் கருத்துக்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம். இது குறித்து திமுகவுக்கு எந்த வலியுறுத்தலையும் நாங்கள் முன்வைக்க மாட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் மதத்தையும் மதிக்கக் கூடியவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஒருவரின் கருத்தை திரித்துப் பேச வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. இவ்வாறு திருத்திப் பேசுவது பிரதமருக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தால், அவர் திரித்துப் பேசட்டும். ஆனால், இந்தியக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அனைத்து நம்பிக்கைகள், மதங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.