July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

ஊழல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுடன் காணாமல் போய் விடும்: அண்ணாமலை பேச்சு

1 min read

Corrupt parties will disappear with parliamentary elections: Annamalai

8.9.2023
ஊழல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுடன் காணாமல் போய் விடும் என்று அண்ணாமலை கூறினார்.

பாதயாத்திரை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தனது 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரை வந்த அண்ணாமலை நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வந்தார். உசிலம்பட்டி வழியாக ஆண்டிபட்டிக்கு வந்த அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எம்.ஜி.ஆர். சிலை வழியாக ஜக்கம்பட்டி வரை 2 கி.மீ தூரம் நடந்து சென்றார். அப்போது லேசான சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலையை அண்ணாமலைக்கு அணிவித்தனர். அப்போது கொட்டும் மழையில் பொதுமக்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-

கடவுள் நம்பிக்கை

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு தரப்பினருக்கும், நம்பிக்கை இல்லாத சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடவுள் நம்பிக்கை கொண்ட யாரும் சனாதன தர்மத்தை ஒழிக்க நினைப்பவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஊழல் பேர்வழிகளை தங்கள் கட்சியில் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் வருகிற பாராளுமன்ற தேர்தலாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ அன்றில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை.
ஊழல், வாரிசுகளை கட்சியில் வைத்துள்ள ஒரு கூட்டணிக்கும், நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் மோடி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள்.
மகாபாரத யுத்தத்தைப் போன்று ஒரு பக்கம் கவுரவர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பாண்டவர்கள் போல நின்று கொண்டு இருக்கிறோம். மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். இந்து மதத்தை தொடர்ந்து கொச்சைபடுத்தி வரும் தி.மு.க.வினர் வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினரை ஆதரித்து வருகின்றனர். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் கூட இந்து மதத்தை அழிக்க முடியவில்லை.
தற்போது முளைத்து 3 இலை கூட விடாத உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அழித்து காட்டுகிறேன் என சவால் விடுகிறார். இந்த சவாலுக்கான தீர்வு தேர்தல் முடிவில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.