தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
1 min read
Tuticorin VAO Life imprisonment for 2 people in murder case
15.9.2023
கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 மாதத்தில் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது இந்த வழக்கில் 52 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு, அரிவாள் உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டிருந்தன.
ஆயுள் தண்டனை
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணல் கொள்ளையர்களான ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வீ.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 5 மாதங்களில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.