முக்கூடலில் கணவன் இறந்த துக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
1 min read
Woman hangs herself in grief over her husband’s death in Mukoodal
16.9.2023
அம்பை அருகே உள்ள வி.கே.புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 36). இவரது மனைவி வசந்தி(34). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. தற்போது முக்கூடல் பாண்டியாபுரம் தெருவில் தம்பதி வசித்து வந்தனர்.
இசக்கிமுத்து முக்கூடல் அருகே உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 11-ந்தேதி இரவில் அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். முக்கூடல்-ஆலங்குளம் பிரதான சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறி இசக்கிமுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் இறந்த துக்கத்தில் அவரது மனைவி வசந்தி மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த 4 நாட்களாக அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உறவினர்கள் பார்த்தபோது வசந்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக அவர்கள் முக்கூடல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.