அச்சன்கோவில் வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தங்களை திருடிய 5 பேர் கைது
1 min read
5 arrested for stealing tusks from dead elephant in Achankovil forest
17.9.2023
தமிழக-கேரள மாநிலங்களின் எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அச்சன்கோவில் அருகே உள்ள தென்மலை மயிலாடும்பாறை பகுதியில் ஒரு கரையில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதனை ஆற்றில் குளிக்க வந்த அச்சன்கோவில் மீனவர்கள் சிலர் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் அதனை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் யானையின் தந்தம் ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கல்லாறு வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து யானை தந்தந்தை கைப்பற்றினர். கல்லாறு வனத்துறை அதிகாரி அனீஸ்குமார் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் புனலூர் பகுதியை சேர்ந்த சரத் என்பவர், யானையின் ஒரு தந்தத்தை காட்டுப்பகுதியில் வீசியது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் பிடித்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த குஞ்சுமோன், ஸ்ரீஜித், அனீஸ், பிரசாத் ஆகியோர் சரத்துடன் சேர்ந்து வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இறந்த நிலையில் கிடந்த யானையின் உடலில் இருந்து 2 தந்தங்களையும் திருடி உள்ளனர். அதில் ஒன்றை வீட்டில் பதுக்கி வைத்துவிட்டு, மற்றொன்றை காட்டில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சரத் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு தந்தத்தையும் வனத்துறையினர் கைப்பற்றினர். பின்னர் ஐவரி போலீசாரிடம் 5 பேரையும் வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவர்கள் புனலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.