நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதியில் மழை நீடிப்பு
1 min read
Continuation of rain in Mancholai Forest of Nellai District
17.9.2023
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 4 மில்லி மீட்டரும், களக்காட்டில் 3.20 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான சாரல் பெய்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மலை பகுதியில் தொடரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது. தொடர் விடுமுறையை யொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் அருவிகளில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். அணை பகுதிகளை பொறுத்தவரை அடவி நயினார் அணையில் 2 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 1.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கருப்பா நதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.