அன்னதான திட்டத்தின் மூலம் 82 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள்- அமைச்சர் சேகர்பாபு தகவல்
1 min read
82,000 people are eating through the Annadana programme- Minister Shekharbabu informed
19.9.2023
அன்னதான திட்டத்தின் மூலம் கோவில்களில் தினமும் 82 ஆயிரம் பேர் சாப்பிடுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
செயலி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தரம் உறுதி செய்து செயலி மூலம் பதிவேற்றும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களும், சேவைகளும் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களும் செம்மையாக நடைபெற்று வருகிறது. இரண்டு கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 8 கோவில்களுக்கும், 754 கோவில்களில் வழங்கப்பட்டு வந்த ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 கோவில்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு நாள்தோறும் சுமார் 82 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தாண்டு பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை ஆகிய 3 கோவில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோவில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் தொடங்கப்படவுள்ளது.
பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,000 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தைப்பூசத்திற்கு பழனிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் நபர்கள் வீதம் 20 நாட்களுக்கு 2, லட்சம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நாட்களில் நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 15 கோவில்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு மேலும் 5 கோவில்களில் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
சட்டமன்ற அறிவிப்பின்படி, கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்தோடு இருப்பதனை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் உறுதி செய்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு கோவிலிலும் ஆண்டிற்கு மூன்று முறை ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா எனவும், சமையல் கூடம், உணவருந்தும் கூடம் சுத்தமாக பாராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும். மாதந்தோறும் குறைந்தபட்சம் 125 கோவில்களை ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். அதனடிப்படையில் உணவு கூடங்களை மேம்படுத்துவது, சமைக்கின்ற உணவின் தரம் குறைவாக இருப்பின் அதனை உயர்த்துவது குறித்து முடிவெடுத்து பாதுகாப்பான, தரமான உணவை பக்தர்களுக்கு வழங்குவோம்.
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது இருக்கின்ற குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு பேருதவியாக அமையும். கோவில்கள் குறித்த தகவல்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவில் செயலியை இதுவரையில் 25 ஆயிரம் நபர்கள் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள். அன்னதானம் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் கோவில் செயலி வாயிலாகவும், துறை இணையதளத்தில் “குறைகளை பதிவிடுக” என்ற பிரிவின் வாயிலாகவும் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த கோவில்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் தொலை பேசி எண்கள் வாயிலாகவும் குறைகளை தெரிவிக்கலாம். ஒவ்வொரு மாதமும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் சீராய்வு கூட்டத்தில் துறையின் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டாலும் குறிப்பாக கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள், வருவாயை பெருக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
மீட்பு
இதுவரை ரூ.5,217 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ரூ.100 கோடி மதிப்பீட்டிலான கோவில் சொத்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 ஆயிரம் கோவில்கள் ஒரு கால பூஜையில் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.