July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகளை முடிக்க முதல்அமைச்சர் அறிவுறுத்தல்

1 min read

Chief Minister instructs to complete road works before monsoon

21.9.2023
மணப்பாக்கம் – கொளப்பாக்கம் – கிருகம்பாக்கம் சாலையில் ரூ. 4.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி, வேளச்சேரி மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு தமிழக முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் பணிகளை போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் மேற்கொள்வதற்கும், பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 19ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து உள்ளது என்றும், தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்றும், பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள், இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்றும், நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும் என்றும் அன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

அமைச்சர்களும், அரசு செயலாளர்களும், துறைத் தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் சாலைப் பணிகளை ஆய்வு நடத்தவுள்ளேன் என்றும் முதல்வர் தெரிவித்தார். மேலும், சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்றும் கண்டிப்போடு தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று (செப்.21), தமிழக முதல்வர் பெருங்குடி மண்டலம், ராம் நகர் பகுதிகளிலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மணப்பாக்கம் – கொளப்பாக்கம் – கிருகம்பாக்கம் சாலை மற்றும் ராமாபுரம் – திருவள்ளூவர் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருங்குடி மண்டலம், ராம் நகரில் 7வது குறுக்கு தெரு, 3-வது பிரதான சாலை மேற்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மணப்பாக்கம் – கொளப்பாக்கம் – கிருகம்பாக்கம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் ராமாபுரம் – திருவள்ளுவர் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.

சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர், அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

சாலைப் பணிகளை பார்வையிட்ட பின்னர், முதல்வர் முகாம் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர், முதன்மை பொது மேலாளர் ஆகியோருடன் சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.