அண்ணாமலைக்கு திடீர் உடல்நல குறைவு- யாத்திரை ஒத்திவைப்பு
1 min read
BJP President Annamalai’s sudden ill health – postponement of Yatra
4.10.2023
பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நல குறைவு காரணமாக அவரது பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
அண்ணாமலை
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்திற்கு அவர் என் மண் என் மக்கள் என பெயரிட்டுள்ளார். பலக்கட்டங்களாக நடைபயணம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம் காரணமாக யாத்திரை அக்டோபர் 4-ம் தேதியில் இருந்து அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 6-ம் தேதி துவங்க இருந்த பாத யாத்திரை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. தமிழ்நாடு அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இரண்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில் டெல்லி சென்று திரும்பிய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்டோபர் 5-ம் தேதி பா.ஜ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டம் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அண்ணாமலையின் டெல்லி பயணம் காரணமாக அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.