ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்- அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு
1 min read
Salary hike for teachers, job permanency – Minister Anbil Action Announcement
4.10.2023
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
ஊதிய உயர்வு
இந்த நிலையில், “பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்து உள்ளார்.