திருப்பதி கோவிலில் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர் சாமி தரிசனம் செய்வது எப்படி?
1 min read
How can a parent with an infant do Sami darshan in Tirupati temple?
5.10.2023
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கான நடை முறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோர் நேரடி தரிசனத்தைப் பெற முடியும். பெற்றோர் ஆதார் அட்டை குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உடன் பிறந்தவா்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவா்களின் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அவா்கள் உடன் வரும் உறவினா்களுக்கு அனுமதி இல்லை.
தரிசனத்துக்கு தகுதியுள்ளவா்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவுவாயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.
ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே அவா்கள் தரிசனம் பெற முடியும். தரிசனம் முடிக்க அவா்களுக்கு சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சந்நிதியை அடுத்து சுபதம் நுழைவாயில் உள்ளது.
அவா்களுக்கு தரிசன டிக்கெட் அல்லது முன்பதிவு தேவையில்லை. நேரில் வந்தாலே போதும்.
இந்த தரிசனம் தினமும் நடைமுறையில் உள்ளது. சிறப்பு விழா நாட்கள், பக்தா்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.
எனவே, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இவற்றைக் கவனத்தில் கொண்டு தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 76, 526 பேர் சாமி தரிசனம் செய்தனர். 32,238 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்துக்கு 16 மணி நேரமாகிறது.