அ.தி.மு.க. விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
1 min read
A.D.M.K. Matter: O. Panneerselvam again appealed to the Supreme Court
7.10.2023
அ.தி.மு.க. பொதுக்குழு முடிவு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும், அ.தி.மு.க.வில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.
தங்களை அ.தி.மு.கவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு, அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கோ, ஓ.பி.எஸ். உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதற்கோ தடை விதிக்க முடியாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி தீர்ப்பளித்தனர். அதில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும். அ.தி.மு.கவில் மனுதாரர்களுக்கான உரிமை குறித்து உரிமையியல் வழக்கில்தான் தீர்மானிக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்காலமாக தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது பிரதான கோரிக்கை மனு மீதான உரிமையியல் வழக்கின் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கூறி, ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் 4-ந் தேதி (புதன்கிழமை) மாலை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். வக்கீல் கவுதம் சிவ்சங்கர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், தாங்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு உரிய வகையில் ஆராயாமல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.