July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்

1 min read

Passenger ship trial run from Nagai to Sri Lanka

8.9.2023

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பணிகள் விரைவாக நடந்து வரும் வேளையில் வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது. இதனால் நாகப்பட்டினம் துறைமுகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர்.

இந்த குழுவினர் பயணிகள் சோதனை கருவி, மருத்துவ பரிசோதனை கருவி, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை சோதனை செய்யும் கருவி, உடமைகளை பாதுகாப்பாக வைப்பது என அனைத்திற்கும் தனித்தனியாக பிரம்மாண்டமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி துறைமுகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதற்கான டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஒரு பயணி இலவசமாக 50 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்து செல்ல முடியும். இலங்கை செல்வதற்கு பாஸ்போர்ட், விசா ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் செய்யது ஹாசிப் ஜூஹைர் கூறினார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் வருகிற 10-ந் தேதி காலை 7.30 மணிக்கு கப்பல் புறப்பட்டு 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த கப்பலின் சோதனை ஓட்டமானது இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கி நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் 14 அதிகாரிகள் கப்பலில் பயணம் செய்தனர். இது மீண்டும் இன்று இலங்கைக்கு திரும்பி வர உள்ளது. இதேபோல், நாளை சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது. துறை சார்ந்த பணிகளின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.