பல்லடம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் சாவு
1 min read
Car-lorry head-on collision near Palladam – 3 killed
13.10.2023
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர்,
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன், நித்திஷ், பிரேம்குமார் ஆகிய மூன்று இளைஞர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு சொகுசு காரில் சென்றுள்ளனர். அதேபோல கேரளாவில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றுகொண்டிருந்த லாரியை பாண்டியன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் பயணித்த 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.