தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
1 min read
Cauvery Management Authority orders Karnataka to release 3,000 cubic feet of water per second to Tamil Nadu‘
13.10.2023
தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நீர்
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், 16-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகத்தை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஒழுங்காற்றுக்குழு விடுத்த பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்த தயக்கம் காட்டி இருப்பதாக தெரிகிறது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அவசரமாக கூட்ட, ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் நேற்று முடிவு எடுத்து அறிவித்தார்.
அதன்படி, மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உத்தரவு
இந்த கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, வருகிற 16-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு இந்த உத்தரவினை பிறப்பித்து உள்ளது.
கர்நாடகம் கோரிக்கை
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனினும், கர்நாடகாவின் கோரிக்கை தொடர்பாக மேலாண்மை ஆணையம் தற்போது வரை முடிவு எதையும் எடுக்கவில்லை.