மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் 1008 திருவிளக்கு பூஜை
1 min read
1008 Thiruvilakku Pooja at Ayya Vaikunda Dharmapati, Manaliputhunagar
14.10.2023
சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவில் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா வைகுண்டர் பதிவலம் வந்தார். தினமும் திருஏடு வாசிக்கப்பட்டது. 8-ம் நாளான, நேற்று இரவு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக, திருக்கல்யாண சுருள் மற்றும் லட்டு, அதிரசம், பனியாரம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பக்தர்கள் செண்டை மேளம் முழங்க, ஊர்வலமாக எடுத்து கொண்டு பதிவலம் வந்து அய்யா வைகுண்டர் முன்பு படையலிட்டனர். சன்னதியின் வாயிலில் இருக்கும் பிரமாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு, வைகுண்ட தர்மபதியில் வைகுண்டர் ஒளி வெள்ளத்தில் எழுந்தருளினார்.
கோவில் வளாகத்தில், 1008-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து, விளக்குகள் ஏற்றி, திருக்கல்யாண ஏடு வாசிப்பை உச்சரித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அய்யா, குதிரை வாகனத்தில் பதிவலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (15-ந்தேதி) காலை நடக்கிறது. காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார். தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமிநாதன், பொருளாளர். பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செய லாளர் கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வா கிகள் செய்து வருகிறார்கள்.