குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம்
1 min read
Aippasi Vishu Festival Chariot at Courtalam
14.10.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றால நாத சாமி திருக்கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குற்றாலம் திருக்குற்றால நாத சாமி கோவில் ஐப்பசி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை இரவில் ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து முருகன் தேர், குற்றாலநாதர் தேர், குழல்வாய்மொழி அம்பாள் தேர், ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்பட்டது. அப்போது சிவ பூத கனவாத்தியங்கள் இசைக்கப்பட்டது தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
அதனைத் தொடர்ந்து வரும் 15 ம் தேதி காலை 9.30 மணிக்கும் இரவு 7 மணிக்கு நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ம் தேதி காலை 10:30 மணிக்கு மேல் சித்திரை சபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 18ஆம் தேதி காலை 10:40 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் கவிதா உதவி ஆணையர் கண்ணதாசன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குற்றாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.