July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 பேர் தமிழகம் வந்துள்ளனர்

1 min read

So far 61 people have come to Tamil Nadu from Israel

14.10.2023
இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

இஸ்ரேலில் தமிழர்கள்

இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைகினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில் நேற்று 13.10.2023 அன்று முதற் கட்டமாக புது டெல்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று 14.10.2023 மதுரை, திண்டுக்கல், கரூர், தென்காசி, தர்மபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கோயம்பத்தூர் முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று காலை 06.00 மணிக்கு புது டெல்லி வந்தடைந்தனர்.

புது டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களை வரவேற்று அவர்களுக்கு காலை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு செலவில் விமான பயண சீட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களில் 16 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 12 தமிழர்கள் கோயம்பத்தூர் விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர். மேலும் அரசின் தரப்பில் அவர்கள் சொந்த மாவட்டங்கள் செல்ல வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த 16 தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கோயம்பத்தூர் விமான நிலையம் வந்தடைந்த 12 தமிழர்களையும், கோயம்பத்தூர் மாவட்ட கலெக்டர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுவரை, இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.