நாசிக் பேருந்து விபத்தில் 12 பேர் பரிதாப சாவு- பிரதமர் மோடி இரங்கல்
1 min read
12 killed in Nashik bus accident- Prime Minister Modi condoles
15.10.2023
மராட்டிய மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 12 பேர் பரிதாப இறந்தனர். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிதூது நிவாரண உதவியையும் அறிவித்தார்
விபத்து
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தின் பதர்டி மற்றும் இந்திராநகர் பகுதியை சேர்ந்த 35 பேர், புல்தானாவில் உள்ள சைலானி பாபா தர்காவிற்கு ஒரு தனியார் மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சம்ருத்தி விரைவுச்சாலையில் வைஜாபூர் பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் டிரக் வாகனத்தை சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை செய்தனர். இதனையடுத்து, அந்த கண்டெய்னர் ஓட்டுனர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காக திருப்பினார்.
அப்போது அதன் பின்னே வந்த அந்த மினி பேருந்து, கண்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த மினி பேருந்து உருக்குலைந்து போனது.
12 பேர் சாவு
இதனையடுத்து, அங்கிருந்தவர்களும் போக்குவரத்து அதிகாரிகளும் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர். விரைந்து வந்த அவசர உதவி சேவை ஊர்தியில், காயமடைந்த 17 பேர் சம்பாஜி நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் 6 பேர் வைஜாபூர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவ்விபத்தில் அந்த பேருந்தில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு 4-மாத குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி இரங்கல்
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த விபத்து செய்தி கேட்டு என் இதயம் வலிக்கிறது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் தெரிவித்தார்.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.