செங்கோட்டை அருகே குண்டாறு அணையில் மூழ்கி வாலிபர் பலி
1 min read
A teenager drowned in Gundaru Dam near Senkottai
16.10.2023
தென்காசி அருகே உள்ள இலத்தூர் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரது மகன் சுப்பிரமணியன் (வயது 27) இவர் கட்டிட தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அவரது தாயுடன் இலத்தூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சுப்பிரமணியன் தனது நண்பர்களுடன் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அங்கு அணையில் நண்பர்களுடன் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சுப்பிரமணியனை மட்டும் காணவில்லை. இதனால்
அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி தேடினார்கள். அப்போது தண்ணீருக்குள் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக இது பற்றி செங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.