திருப்பூரில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து 3 பேர் சாவு
1 min read
In Tirupur, the roof of a social welfare center collapsed and 3 people died
16.10.2023
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் இருக்கிறது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள், சமுதாய நலக்கூடம் முன்பு பஸ்சுக்காக காத்து நின்று உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள்.
இன்று காலை கொழுமம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மணிகண்டன் (வயது 28), கவுதம் (29), முரளிராஜன் (35) ஆகியோர் வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக சமுதாய நலக்கூடம் முன்பு காத்து நின்றனர். இந்நிலையில் உடுமலை பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சமுதாய நலக்கூடத்தின் முன்புற ஸ்லாப் திடீரென இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது.
இதில் மணிகண்டன், கவுதம், முரளிராஜன் ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.
மு.க.ஸ்டாலின் நிதியுதவி
திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம், கொழுமம் – பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று (16-10-2023) காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் முரளி ராஜா, த/பெ.மன்மதன் (வயது 35), கௌதம், த/பெ.சின்னதேவன் (வயது 29) மற்றும் மணிகண்டன், த/பெ.பாபு (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து, அவர்களை உடுமலைப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த மூவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.