குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது ஏன்? இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்
1 min read
ISRO Chief Somnath meeting with Prime Minister M.K.Stalin
16.10.2023
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது ஏன்? என்பது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்தார்.
சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உடனிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட்டது. இஸ்ரோவில் நடந்துவரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் கூறினேன். அவரும் அதுகுறித்து அறிந்துள்ளார். இஸ்ரோவின் முன்னெடுப்புகளுக்கு உதவுவதாக அவரும் கூறினார். நாட்டின் விண்வெளி சார்ந்த பணிகளுக்கு தமிழகத்தின் பங்களிப்பு பெருமையளிக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கைத் தீவு இருப்பதால், அங்கிருந்து ஏவப்படும் அனைத்தும் அந்த தீவைச் சுற்றித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு சுற்றிச் செல்லும்போது, ராக்கெட்டின் பேலோட் திறன் குறைந்து விடுகிறது. இதனால், சிறிய வகை ராக்கெட்டுகளை அங்கிருந்து ஏவுவதற்கு சிரமமாக உள்ளது. எனவே சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு தென் பகுதிதான் சிறந்தது.
கன்னியாகுமரியிலிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவினால், அது சிறந்ததாக இருக்கும். கன்னியாகுமரியில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. எனவே, தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் அரசு 2,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறப்பனதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.