July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்

1 min read

Manali Pudunagar Ayya Vaikunda Dharmapati Temple Chariot

16.10.2023
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தேரோட்டம்

சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அய்யா, காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார். திருஏடும் வாசிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை – உகப்படிப்பு நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளம் முழங்கப்பட்டது. இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடை கொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி, மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

எர்ணாவூர் நாராயணன்

தேரோட்டத்தை தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், பிரைட் சி.முருகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் பி.ஆதிகுருசாமி, மாநில இணைச்செயலாளர் சந்திரசேகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “அய்யா அரஹர சிவ சிவ அய்யா உண்டு” என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், இரவு 10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெற்றது.

பூப்பல்லக்கு

பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 மணிக்கு அய்யா பூம்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்டசோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெற்றது.

விழா ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொதுச்செயலாளர் ஏ.சுவாமி நாதன், பொருளாளர். பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ், துணை செயலாளர் வி.சுந்தரேசன், இணை பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.