மாஞ்சோலை பகுதிகளில் மழை- பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
1 min read
Rain in Mancholai areas – Increase in water flow to Papanasam Dam
16.10.2023
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில், அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாஞ்சோலை
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டம் முழுவதிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் பெய்து வரும் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சி, நாலுமுக்கு பகுதி களில் தலா 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. சில நாட்களாக அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 88.45 அடி நீர் இருப்பு உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணைக்கு வினாடிக்கு 1,127 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1304 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.