தென்காசி அருகே ரயிலில் அடிபட்டு 13 ஆடுகள் பலி
1 min read
13 goats killed after being hit by a train near Tenkasi
17.10.2023
தென்காசி அருகே கீழப்புலியூர் பகுதியில் ரயிலில் அடிபட்டு 13 ஆடுகள் பலியானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆடுகள் பலி
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி வழியாக தாம்பரம் செல்லும் தினசரி ரயில் நேற்று செங்கோட்டையில் புறப்பட்டு தென்காசி ரயில் நிலையத்தை தாண்டி மாலை 4:15 மணி அளவில் கீழப்புலியூர் ரயில் நிலையத்தை கடந்த போது அந்தப் பகுதியில் தண்டவாளம் அருகே மேய்ந்து கொண்டு இருந்த ஆடுகள் ரயில் முன்பாக பாய்ந்து விட்டது. இதில் வரிசையாக 13 ஆடுகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
ஆடுகள்மீ மோதியது செங்கோட்டை தாம்பரம் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். மேலும் கீழப்புலியூரில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது. எனவே ரயில் அந்த பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 13 ஆடுகள் ரயிலில் அடிபட்டு பலியான போதும் அந்த ரயில் அந்த பகுதியில் நிற்கவில்லை.
13 ஆடுகள் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் தொடர்பாக செங்கோட்டை ரயில் நிலைய பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தி னார்கள. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஒரே சமயத்தில் 13 ஆடுகள் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பலியான ஆடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.
இது பற்றி ரயில்வே துறை சார்ந்த ஒருவர் கூறியதாவது:-
ரயிலில் வழக்கமாக மனிதர்கள் யாரேனும் அடிபட்டால் ரயிலை நிறுத்தும் வழக்கம் உண்டு ஆனால் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடிபட்டால் ரயிலை நிறுத்தும் வழக்கம் இல்லை. ஆனாலும் இது குறித்து ரயில் ஓட்டுநர் அது குறித்து முடிவு எடுத்துக் கொள்வார்.அதேபோன்று டிக்கெட் எடுத்திருக்கும் பயணிகள் யாரேனும் ரயிலில் அடிபட்டால் மட்டுமே ரயில்வே துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படும்.
ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவர்களோ, ரயிலில் பயணம் செய்யாமல், வெளியில் உள்ளவர்களோ அடிபட்டால் இழப்பீடு வழங்க முடியாது. கால்நடைகள் அடிபட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் இந்த அபராதத்திற்கு பயந்து கால்நடைகளின் உரிமையாளர்கள் இறந்து போன கால்நடைகளுக்கு உரிமை கொண்டாடி யாரும் வருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார் .