குண்டுவீசியவர் மீது 7 வழக்குகள்- கூடுதல் காவல் ஆணையர் தகவல்
1 min read
7 cases against bomber-Additional Commissioner of Police information
25.10.2023
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் மீது 7 வழக்குகள் இருப்பதாக கூடுதல் காவல் ஆணையர் கூறியுள்ளார்.
குண்டு வீச்சு
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.
அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது. வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிண்டி காவல்நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் கவர்னரின் செயலாளர் கிரிலோஷ் குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை வேப்பேரியில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய வினோத் மதுபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். வினோத் மீது ஏற்கனவே 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன” என்று கூறினார்.