கனடாவில் விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியா
1 min read
India resumes visa service in Canada
25.10.2023
இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தவிட்டார். இதற்கு பதிலடியாக கனடாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது. மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும்படி கனடாவுக்கு மத்திய அரசு எச்சரித்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் பணியாற்றி வரும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை கனடா குறைத்தது.
விசா
இதனிடையே, கடந்த மாத 21ம் தேதி கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. கனடாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் சேவையை நிறுத்தியது.
இந்நிலையில், கனடாவில் விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வர முடியும். விசா சேவை தொடங்கியுள்ளதால் கனடாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.