நவராத்திரியையொட்டி 9 கோவில்களில் பரதம் ஆடிய பாவூர்சத்திரம் மாணவிகள்
1 min read
On the occasion of Navratri, Bhaurchatram girls performed Bharatam in 9 temples
25.10.2023
தென்காசி மாணவிகள் நவராத்திரி பூஜை நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒன்பது கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பரதநாட்டியம் ஆடி பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
பரதநாட்டியம்
நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில், பல்வேறு கோயில்கள் மற்றும் தொழில்கள் செய்யும் பகுதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் பண்பாட்டை உணர்த்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பூஜா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 முதல் 30 வயது வரையிலான 55 பரதநாட்டிய கலை கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து நக்ஷ்த்ரா பரதநாட்டிய மையத்தின் ஒருங்கிணைப்பில் நவராத்திரி பூஜைகள் கொண்டாடப்படும் 9 நாட்களும் தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க 9 கோயிலுக்கு சென்று அங்கு தான் கற்ற பரத கலையை பறைசாற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பரிசுகளை வென்றுள்ளனர்.
அதன்படி, நவராத்திரி பூஜைகளின் முதல் தினத்தன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலிலும், இரண்டாவது நாள் தாம்பரம் செல்லியம்மன் கோவிலிலும், மூன்றாவது நாள் திருவொறியூர் வடிவுடையம்மன் கோவிலிலும், நான்காவது நாள் மணிமங்கலம் சிவன் கோவிலிலும், ஐந்தாவது நாள் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலிலும், ஆறாவது நாள் மேட்டுப்பாளையம் தென்திருப்பதி கோவிலிலும், ஏழாவது நாள் ஆலங்குளம் ராமர் மலை கோவிலிலும், எட்டாவது நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், ஒன்பதாவது நாள் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலிலும் நவராத்திரி பூஜைகளை சிறப்பாக செய்து தான் கற்ற பரத கலையை பல்வேறு முகபாவனைகளுடன் வெளிப்படுத்தி மாணவிகள் அசத்தினர்.
இதனை ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் கண்டுகளித்து சிறப்பாக தனது கலைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.