கடையம் அருகே பாஜக கொடிக்கம்பம் அகற்றம்: கட்சியினர் தர்ணா
1 min read
Removal of BJP flagpole near Kadayam: Party members stage dharna
25.10.2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள் புரம் கிராமத்தில் நுழைவுப் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாதாரண கம்புடன் கூடிய கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது.
அதன் அருகிலேயே மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்களும் நிறுவப்பட்டிருந்ததால் பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள், தங்களின் கொடி கம்பத்திற்காக ஏற்கனவே கொடி கம்பம் இருந்த இடத்தில் தாமரை வடிவில் படம் வரைந்த அடிப்பகுதி சிமெண்ட் மற்றும் காங்கிரீட்டால் கட்டப்பட்ட திண்டின் மீது இரும்பு குழாயால் கொடிக்கம்பத்தை புதுப்பித்து 2 நாட்களுக்கு முன்பாக கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென கடையம் போலீசார் நேற்று இரவு எவ்விதமுன் அறிவிப்பும் இன்றி அந்தப் பகுதியின் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வின் கொடிக்கம்பத்தை மட்டும் அகற்றி உள்ளனர் .
தர்ணா
இதனால் அந்தப் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியது. மேலும் போலீசாருக்கு எதிராக தரையில் அமர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
தி.மு.க., அ.தி.மு.க. என மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டிருந்ததை அகற்றாமல் தங்களின் கட்சி கொடியை மட்டும் அதுவும் விடுமுறை நாளில் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் எவ்வித முன் அறிவிப்புகளும் இன்றி போலீசார் அகற்றியதால் தாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக பா.ஜ.க.வினர் கூறினர்.
சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதால் தான் கொடி கம்பம் அகற்றப்பட்டதாகவும், மற்ற கொடிக்கம்பங்களும் அனுமதி பெறப்பட்டு வைக்கப்பட்டதா? என ஆய்வு செய்து அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.
மேலும் பா.ஜ.க. கொடி கம்பம் அமைக்க கட்டப்பட்ட காங்கிரீட் அடிப்பகுதியை ஜே.சி.பி. மூலம் அகற்ற மாட்டோம் எனவும் போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் இரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு பரபரப்பு நிலவியது.