குற்றாலம் பகுதியில் தொடர் மழை – அனைத்து அருவிகளிலும் வெள்ளம்
1 min read
Incessant rains in Courtalam area – flooding in all waterfalls
4.11.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் கடந்த ஒரு வார காலமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து வெகுவாக அதிகரித்து வந்தது. இதனால் கடந்த மூன்று நாட்களாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் பகல் நேரங்களில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் அவ்வப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பெய்த பலத்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர் இன்று காலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.