July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

சிறுவனின் நுரையீரலில் இருந்த தையல் ஊசியை அகற்றிய எய்ம்ஸ் டாக்டர்கள்

1 min read

AIIMS doctors remove suture needle from boy’s lung

5.11.2023
சிறுவனின் நுரையீரலில் இருந்த தையல் ஊசியை நூதன முறையில் எய்ம்ஸ் டாக்டர்கள் அகற்றி சாதனை.

நூரையீரலில் ஊசி

புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமையன்று 7 வயது சிறுவன் ஒருவன் இருமலுடன் ரத்த வெளிப்பாட்டின் காரணமாக பெற்றோரால் அழைத்து வரப்பட்டான்.
அவனை பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின்படி அவன் மேல்சிகிச்சைக்காக உட்புற நோயாளியாக அங்கு அனுமதிக்கப்பட்டான். அவனது சிகிச்சையை குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் டாக்டர். விஷேஷ் ஜெயின் கண்காணித்து வந்தார்.

இருமலுக்கான காரணம் உடனடியாக தெரியாததால், அவனுக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அச்சிறுவனின் நுரையீரலின் இடது புற பகுதியில் தையல் ஊசி ஒன்று ஆழமாக பதிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

சிறுவனுக்கு சிகிச்சையளித்த அந்த மருத்துவ குழுவின் மற்றொரு பேராசிரியரான டாக்டர். தேவேந்திர குமார் யாதவ் கூறியதாவது:-

அந்த தையல் ஊசி அச்சிறுவனின் நுரையீரலில் மிக ஆழமாக பதிந்து விட்டது. வழக்கமான வழிமுறைகளில் அதை வெளியே கொண்டு வருவது மிகவும் கடினமான செயல். இந்த உண்மையை உணர்ந்ததும் எங்கள் மருத்துவ குழு தீவிரமாக கலந்தாலோசித்து ஊசியை பாதுகாப்பாக வெளியே எடுக்கும் வழிமுறைகளை விவாதித்தோம். ஒரு மாறுபட்ட புதுமையான வழிமுறையில் இதனை வெளியே எடுப்பதென முடிவானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த வழிமுறையை செயல்படுத்த டாக்டர். ஜெயினின் நண்பர் ஒருவர் டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி சவுக் மார்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து டாக்டர். ஜெயின் குறிப்பிட்டிருந்த நீள அகலங்களில் “காந்தம்” ஒன்றை அவர்களுக்கு வாங்கி தந்தார். அந்த காந்தத்தை கொண்டு மிக சிக்கலான நுண்ணிய சிகிச்சை முறையில் அந்த ஊசி வெளியே எடுக்கப்பட்டது.
இது குறித்து டாக்டர். ஜெயின் கூறியதாவது:

4 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 1.5 மில்லிமீட்டர் கனம் உள்ள அந்த காந்தம்தான் சரியான உபகரணம். எங்கள் முதல் நோக்கம், ஊசி பதிந்துள்ள இடத்தில் காந்தத்தை பத்திரமாக கொண்டு செல்வதாக இருந்தது. சிறு தவறு நடந்தாலும், காந்தமும் நுரையீரல் குழாயில் பதிந்து விடும். அதனால் சிக்கல் இன்னும் அதிகமாகி விடும். அதனால் அந்த காந்தத்தை ஊசி வரை எடுத்து செல்ல ஒரு பிரத்யேக உபகரணத்தையும் தயார் செய்து கொண்டோம். அத்துடன் ஊசி வரை செல்ல நீண்ட நூலும், ரப்பர் பேண்டும் தயார் செய்தோம். ‘எண்டோஸ்கோபி’ எனப்படும் ‘அகநோக்கியியல்’ முறையில் உள்ளே செலுத்தப்பட்ட அந்த காந்தம், ஊசியின் அருகில் சென்றவுடன் ஊசி அதனுடன் ஒட்டி கொண்டது. அதன் மூலம் மெதுவாக வெளியே இழுத்து அதை எடுத்து விட்டோம். இந்த முறையில் அது வெளியே வரவில்லையென்றால் அறுவை சிகிச்சை மூலம் மார்பையும், நுரையீரலையும் கிழித்துத்தான் வெளியே எடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர். ஜெயின் தெரிவித்தார்.

அந்த சிறுவனின் நுரையீரலுக்குள் எவ்வாறு அந்த ஊசி சென்றது என்பது குறித்து அவன் பெற்றோரால் எந்த தகவலும் தர இயலவில்லை.

வெற்றிகரமாக இந்த சிகிச்சையை நடத்திய மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.