எ.வ.வேலு தொடர்பு இடங்களில் 5வது நாளாக சோதனை; ரூ.23.50 கோடி ரொக்கம் பறிமுதல்?
1 min read
5th day of testing at AV Velu contact points; 23.50 crore cash seized?
7.11.2023
திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தற்போது இதுவரை ரூ.23.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகிப்பவர் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடு மற்றும் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மகளிர் கலை கல்லூரி பாலிடெக்னிக் மற்றும் பன்னாட்டு பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந் 3ந் தேதி காலை 7 மணிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் அதிரடி சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சருக்கு சொந்தமான வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் தற்போது மத்திய தொழிற்படை பாதுகாப்பு போலீசார் உதவியுடன் 20 கார்கள், 2 வேன்களில் வந்த 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அமைச்சரின் வீடு மற்றும் கல்விநிறுவனங்கள் சிஐஎப்எஸ் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 4வது நாள் அன்றிரவு முழுவதும் விடிய விடிய வருமான வரிசோதனை நடந்தது. 5வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக்கிளையில் 2 சீல் வைக்கப்பட்ட சூட்கேஸ்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. இன்று பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக்கு கொண்டுவரப்பட்ட தொகை ரூ.5.50 கோடி என தெரியவந்துள்ளது. திங்களன்று பறிமுதல் செய்யப்பட்ட பலகோடி ரூபாய் 4 சூட்கேஸ்களில் பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் வருமான வரித்துறை உயரதிகாரிகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.23.50 கோடி ரொக்கம் சிக்கியிருப்பதாகவும் ரொக்கப் பணம் தவிர 100க்கணக்கான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளின் கையில் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.