சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்: முதல் கட்டமாக 70.87 சதவீத வாக்குகள் பதிவானது
1 min read
Chhattisgarh Assembly Elections: 70.87 percent voting in the first phase
சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது/ மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
முதல் கட்டமாக நடந்த தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.
இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் உள்ளவை ஆகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் இடையே கடும் போட்டி உள்ளது. முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.