சங்கரன்கோவில் அருகே சட்டவிரோத டெலிபோன் இணைப்பகம் நடத்தியதாக 2 வாலிபர்கள் கைது
1 min read
2 youths arrested for running illegal telephone exchange near Sankarankoil
8.11.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் நூதன முறையில் தொலைதொடர்பு சாதனம் மூலம் மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக மோசடியில் ஈடுபட்ட யோசுவா (வயது 30), முனீஸ்வரன் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உள்ள குற்ற பின்னணிகள் குறித்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் தலைமையிலான தனிப்படை மற்றும் பல்வேறு புலனாய்வு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு மேல் இவர்களிடம் நடத்திய விசாரணையில் எந்த விதமான பிடியும் சிக்காததால் காவல் துறையினர் அவர்களை சட்ட விரோதமாக இணைப்பகம் நடத்திய வழக்கில் கைது செய்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது நவீன முறையில் அனைவரும் வீடியோ கால் பயன்படுத்துவதால் இவர்கள் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி இருக்க வாய்ப்பில்லை எனவும், வேறு ஏதாவது நவீன மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த பகுதியில் 600-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதன கருவிகள் லேப்டாப் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் வை-பை மோடம் உள்ளிட்ட கருவிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். முழுமையான ஆய்வுக்கு பின்னரே முழுவிபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் சத்திரப்பட்டியில் உள்ள மரக்கடை ஒன்றில் சோதனை செய்தபோது நூதன முறையில் மோசடி சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு வெளிநாட்டு போன் கால்களை செலவு இல்லாமல் உள்நாட்டு போன் கால்களாக பேசுவதற்கு 600-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.