ஊத்துமலை சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
1 min read
Anti-corruption police raided the house of Uthumalai Registrar
8.11.2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை பல லட்சம் மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் தாணு மூர்த்தி (வயது 58) இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி உள்ளார். அப்போது அவர் வருமானத் திற்கு அதிகமாக ரூபாய் 25 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தானுமூர்த்தி மீது நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் தானு மூர்த்தியின் சொந்த ஊரான நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள வீட்டிலும், திங்கள் நகர் பகுதியில் உள்ள அவரது மாமனார் வீட்டிலும் நேற்று காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது அந்த வீட்டிலிருந்து பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 20 ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.