சென்னை அருகே 21 ஏக்கர் ஏரியை விற்க முயற்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
1 min read
Attempt to sell 21-acre lake near Chennai: Anbumani Ramadoss accused
8/11/2023
பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையை அடுத்த காயரம்பேடு கிராமம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கிராமம் ஆகும். அதனால், காயரம்பேட்டில் ஏரிகளும், அவற்றுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களும் உண்டு.
சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக காயரம்பேடு கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து காயரம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள நில வணிக நிறுவனங்கள், அங்குள்ள நிலங்களை கொத்துக்கொத்தாக வாங்கி வீட்டு மனைகளாக மாற்றியமைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அத்தகைய நிறுவனங்களில் ஒன்றுக்கு தான் 21 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை தாரைவார்க்கும் சதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிலவணிக நிறுவனம் ஒன்று, காயரம்பேடு கிராமத்தில் புல எண் 370-ல் உள்ள சுமார் 100 ஏக்கர் புன்செய் நிலங்களை விலைக்கு வாங்கியிருக்கிறது. அதை ஒட்டி, புல எண் 430-ல் சித்தேரி தாங்கல் என்ற ஏரி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த தனியார் நிறுவனத்திற்கு சித்தேரி அமைந்துள்ள 21 ஏக்கர் நிலம் பட்டா செய்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேளாண்மைக்கு பயன்பட்டு வந்த சித்தேரியை எப்படி தனியாருக்கு பட்டா போட்டு தர முடியும்? அவர்களுக்கு அதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
ரூ.200 கோடி மதிப்பும், 21 ஏக்கர் பரப்பும் கொண்ட நீர்நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலை முழுமையாக அறிந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மாறாக, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.