தென்காசி ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்ற கேரள ஆசாமி கைது
1 min read
Kerala man arrested for trying to rob Tenkasi ATM
8.11.2023
தென்காசி பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்து தப்பி ஓடிய கேரள மாநிலத்தை சேர்ந்த நபரை விரைந்து சென்று கைது செய்த தென்காசி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்காசி – இலஞ்சி சாலை நடுபெட்ரோல் பல்க் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில் புகுந்த ஒரு ஆசாமி ஏடிஎம்மில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அந்த பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு இருந்ததை கலனித்த அந்த நபர் ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடிவிட்டார்.
மறுநாள் காலையில் வங்கி அலுவலர்கள் வந்து பார்த்த போது ஏடிஎம்மை உடைத்து சேதப்படுத்தி கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார்
சிசிடிவி கேமரா உதவியின் மூலம் புலன் விசாரணை செய்தனர். தீவிர விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் பிள்ளை என்பவரது மகன்
ராஜேஷ் (வயது 41) என்பதை அறிந்து உடனடியாக கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்று அந்த நபரை அதிரடியாக கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த நபர் ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
உடனடியாக அந்த நபரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தென்காசி நகரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் துணிச்சலுடன் கொள்ளை அடிக்க முயன்ற நபரை 10 மணிநேரத்தில் கைது செய்த தென்காசி குற்ற பிரிவு பெண் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் மாடசாமி, காவலர்கள் பாலமுருகன், சக்திவேல்,சீவலமுத்து, அருள்ராஜ், ஆலெக்ஸ், மஜித் ஆகியோரை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெகுவாக பாராட்டினார்.