பாராளுமன்றத்துக்கு ஏப்ரலில் தேர்தல்: தமிழகத்தில் ஓட்டுப்பதிவை ஒரே கட்டமாக நடத்த முடிவு
1 min read
Elections to Parliament in April: Decision to conduct voting registration in Tamil Nadu in one phase
9.11.2023
இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இப்போது வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய புது வாக்காளர்களை சேர்ப்பது, முகவரி மாற்றம் ஆகிய பணிகள் தேர்தல் கமிஷனால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடித்து ஜனவரி 5-ந்தேதி புதிய வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மே 10-ந்தேதியுடன் நிறைவுபெற உள்ளதால் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளி-கல்லூரி தேர்வு தேதிகள் எப்போது முடிவடைகிறது என்பது பற்றியும், உள்ளூர் விடுமுறை நாட்கள் பண்டிகைகள், விழா காலங்கள் போன்ற விவரங்களை வைத்து அதன் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும்.
அந்த வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் எந்தெந்த தேதிகளில் தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க சென்னையில் இன்று தென்மாநில தேர்தல் அதகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவர்களுடன் அந்தந்த மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள், உளவுப்பிரிவு உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் அகியோரும் பங்கேற்றனர். இந்திய தேர்தல் கமிஷனின் மூத்த அதிகாரிகள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் எந்தெந்த தேதிகளில் பள்ளி, கல்லூரி பரீட்சைகள் தொடங்கி எந்த தேதியில் முடிவடைகிறது என்று அதிகாரிகள் விவரம் கேட்டனர். அதற்கு கல்வித்துறை சார்பில் விரிவான விவரம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் இதே போல் பரீட்சை தேர்வு தேதிகள் விவரம் கேட்டறியப்பட்டது. பண்டிகை காலங்கள் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்ற தகவலும் கேட்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும் போலீஸ் பாதுகாப்புக்கு எவ்வளவு போலீசார் தேவைப்படும் என்றும் மத்திய போலீஸ் படை மற்றும் துணை ராணுவ படை எவ்வளவு தேவைப்படும் என்ற விவரமும் கேட்டறியப்பட்டது.
தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், எவ்வளவு கையிருப்பு உள்ளது. இன்னும் கூடுதலாக எவ்வளவு தேவைப்படும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
விவிபேட், கட்டுப்பாட்டு எந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை இருப்பு குறித்தும் வாக்குச்சாவடி பணியாளர்கள், எண்ணிக்கை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பதட்டமான பகுதிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை போல் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் இறுதியில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏப்ரலில் எந்த தேதியில் தேர்தல் நடத்தினால் உகந்ததாக இருக்கும் என்றும் கருத்து கேட்டறிந்தனர்.
இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும், எந்ததெந்த தேதியில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.