கிறிஸ்தவ சபையை பழிவாங்கவே வெளிநாட்டில் இருந்து திரும்பினேன்: டொமினிக் மார்ட்டின் தகவல்
1 min read
I returned from abroad to avenge the Christian church: Dominic Martin reports‘
9.11.2023
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கடந்த 31-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார். குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரிடம் கடந்த 6-ந்தேதி முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் குண்டு வெடிப்பை தான் மட்டுமே நிகழ்த்தியதாகவும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்ற கருத்தையே தொடர்ந்து கூறி வருகிறார்.
இருந்தபோதிலும் போலீசார் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவரது வீடு, குண்டு வெடிப்பு நடந்த இடம் உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.
டொமினிக் மார்ட்டின் வெளிநாட்டில் பல ஆண்டுகள் இருந்திருப்பதால் அவருக்கு குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்ற வெளிநாட்டை சேர்ந்த யாரும் உதவினார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த சபையை பழிவாங்குவதற்காகவே வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியடி உள்ளனர். டொமினிக் மார்ட்டினின் போலீஸ் காவல் வருகிற 15-ந்தேதி முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.