ரெயில்களில் பட்டாசு எடுத்து சென்ற 4 பேர் கைது
1 min read
4 people arrested for carrying crackers in trains
10.11.2023
மின்சார ரெயில்களில் பட்டாசு எடுத்து சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டாசு
தீபாவளி பண்டிகை கொண்டாட்ட உற்சாகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் பட்டாசு பஸ், ரெயில்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எளிதில் தீ பற்றக்கூடிய இவற்றை பயணத்தின் போது கொண்டு சென்றால் ரூ.1000 அபராதம். அதனை கட்ட தவறினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட விதி உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் பலரும் பட்டாசு வாங்கி வருகின்றனர். இதனால் மின்சார ரெயில்களில் அதிரடி சோதனை தொடங்கியுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், தண்டையார்பேட்டை, பேசின்பாலம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டன.
திருவள்ளூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் நடந்த சோதனையில் 4 பேர் பிடிபட்டனர்.
திருத்தணி புறப்பட்டு சென்ற மின்சார ரெயிலில் புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் கொரட்டூரில் ரூ.15 ஆயிரத்துக்கு பட்டாசு வாங்கி வந்ததாக தெரிவித்த பிரதாப் குமார் (24), ஹரி பிரசாத் (18) ஆகியோரை போலீசார் கைது செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர். அதே போல் மூர்மார்க்கெட் நிலைய பிளாட்பாரத்தில் சோதனை செய்த போது தண்டபாணி (39) என்பவர் பிடிபட்டார். அயப்பாக்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி (38) என்பவர் ரூ.5 ஆயிரத்து 500 மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளை கொண்டு வந்த போது சிக்கினார். இருவருக்கும் ரெயில்வே போலீஸ் சட்ட விதிகளின்படி ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
ரெயில்வே கோர்ட்டில் ஆஜராகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்றும் ரெயில்களில் பட்டாசு சோதனை நடைபெறுகிறது. பொதுமக்கள் பட்டாசுகளை ரெயில்களில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.