ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்- சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு
1 min read
OPS Appeal will be taken up for hearing on 15th – Chennai High Court Notification
10.11.2023
அ.தி.மு.க. பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அ.தி.மு.க. கொடி
அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சதிஷ்குமார் முன்பு கடந்த 7-ந்தேதி நடைபெற்றது.
அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என இ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு வருகிற புதன்கிழமை (15-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நேற்று விசாரிக்க ஓ.பி.எஸ். தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்தனர்.