July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க அதிபர் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் மக்கள்

1 min read

People who want change in the US presidential election

19.11.2023
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (வயது 80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.

பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது. இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.
1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு – குறிப்பாக இளம் வயதினருக்கு – ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.